Hadith Dua
(ஹதீஸ்) துஆக்கள்
மொத்த 77 துஆகள்
1) அல்லாஹ்வே இவ்வுலகத்திலும் எங்களுக்கு அழகியதைக் கொடு! மறுமையிலும் அழகியதைக் கொடு. நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைப் பாதுகாத்துக் கொள்!.
(ஸஹீஹுல் புகாரி)
2) அல்லாஹ்வே! நரக நெருப்பின் சோதனையை விட்டும். நரக நெருப்பின் வேதனையை விட்டும். கப்ரின் சோதனையை விட்டும். கப்ரின் வேதனையை விட்டும். செல்வத்தால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கை விட்டும். வறுமையால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கை விட்டும், நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! மஸீஹ் தஜ்ஜால் மூலம் ஏற்படும் குழப்பத்தின் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே பனிக்கட்டியைக் கொண்டும் ஆலங்கட்டியைக் கொண்டும் எனது உள்ளத்தைக் கழுவிவிடு! வெண்மையான ஆடையை அழுக்கை விட்டு நீ சுத்தப்படுத்தியது போன்று குற்றங்களை விட்டு என் உள்ளத்தைச் சுத்தப்படுத்திவிடு! கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையில் நீ தூரத்தை ஏற்படுத்தியதைப் போன்று எனக்கும் எனது குற்றங்களுக்குமிடையில் தூரத்தை ஏற்படுத்திவிடு! அல்லாஹ்வே! சோம்பேறித்தனம், பாவம், கடன் ஆகிய அனைத்தை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹுல் புகாரி)
3) அல்லாஹ்வே! பலவீனம், சோம்பேறித்தனம், கோழைத்தனம், வயோதிகம், கஞ்சத்தனம் ஆகிய அனைத்தை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கப்ரின் வேதனையை விட்டும். வாழ்க்கை மற்றும் மரணத்தில் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹுல் புகாரி)
4)அல்லாஹ்வே! கடினமான சோதனையை விட்டும். கெடுதிகள் பீடிப்பதை விட்டும். விதிக்கப்பட்டதின் தீமையை விட்டும். எதிரிகளின் நகைப்பை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹுல் புகாரி)
5) அல்லாஹ்வே எனது காரியத்திற்குப் பாதுகாப்பாக இருக்கும் மார்க்கத்தை எனக்கு நீ சீர்ப்படுத்தித் தா! நான் வாழும் உலகத்தை எனக்கு சீர்ப்படுத்தித் தா! நான் மீள இருக்கும் மறுமையை எனக்குச் சீர்ப்படுத்தித் தா! வாழ்க்கையை, நான் நன்மைகளை அதிகரித்துக் கொள்ள ஏற்றதாக ஆக்கு! மரணத்தை எனக்கு தீமையை விட்டு ஓய்வாக ஆக்கு!.
(ஸஹீஹ் முஸ்லிம்)
6) அல்லாஹ்வே! நேர்வழி, உனது பயம், பத்தினித்தனம், செல்வம் ஆகிய அனைத்தையும் நிச்சயமாக நான் உன்னிடமே கேட்கிறேன்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
7) அல்லாஹ்வே! பலவீனம், சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிகம், கப்ரின் வேதனை ஆகிய அனைத்தையும் விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! என் உள்ளத்திற்கு அதற்குரிய பயத்தைக் கொடு! அதை நீ தூய்மைப்படுத்து! நீயே அதை மிகச் சிறந்த முறையில் தூய்மைப்படுத்துபவன். நீயே அதன் பாதுகாவலன். அதன் எஜமானன். அல்லாஹ்வே! பயனற்றக் கல்வியை விட்டும். பயமற்ற உள்ளத்தை விட்டும். திருப்தி கொள்ளா ஆன்மாவை விட்டும். ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
8) அல்லாஹ்வே! எனக்கு நேர்வழி காட்டு! என்னை நேர்மையாளனாக ஆக்கு! அல்லாஹ்வே நிச்சயமாக நான் நேர்வழியையும் நேர்மையையும் உன்னிடமே கேட்கிறேன்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
9) அல்லாஹ்வே! நீ (எனக்குச்) செய்த அருள் (என்னிடமிருந்து) நீங்குவதை விட்டும். நீ வழங்கிய பரிபூரண சுகம் அகன்று விடுவதை விட்டும். திடீரென நீ தண்டிப்பதை விட்டும். உனது எல்லா விதமான கோபத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
10) அல்லாஹ்வே! நான் செய்த செயல்களால் ஏற்படும் தீங்கை விட்டும், நான் செய்யாத செயல்களால் ஏற்படும் தீங்கை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
11) அல்லாஹ்வே! என் செல்வத்தையும் என் சந்ததியையும் அதிகப்படுத்து! நீ எனக்கு கொடுத்தவற்றில் பரக்கத்தை ஏற்படுத்து! உனது வணக்க வழிபாட்டில் எனக்கு நீண்ட வாழ்க்கையைத் தா! என் அமல்களை அழகுபடுத்து! என்னை மன்னித்துவிடு!.
(ஸஹீஹுல் புகாரி, அல் அதபுல் முஃப்ரத்)
12) மகத்துவமிக்க, சகிப்புத்தன்மை உடைய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. மகத்தான அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. வானங்களின் இறைவன். பூமியின் இறைவன். சங்கைமிகுந்த அர்ஷின் இறைவனான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை.
(ஸஹீஹுல் புகாரி)
13) அல்லாஹ்வே! உன் அருளை ஆதரவு வைக்கிறேன். கண் சிமிட்டும் நேரமளவு கூட என்னை என் பக்கம் பொறுப்பு ஒப்படைத்து விடாதே! எனது எல்லாக் காரியத்தையும் எனக்கு சீர்ப்படுத்தித் தா! உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
(ஸுனன் அபூதாவூது)
14) உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நிச்சயமாக நான் அநீதி இழைத்துக் கொண்டவர்களில் ஒருவனாக இருக்கிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
15) அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உனது அடிமை. உன் அடிமையின் மகன். உனது அடிமைப் பெண்ணின் மகன். என் உச்சி முடி உன் கையில்தான் இருக்கிறது. என்னில் உன் தீர்ப்பு நிறைவேறியே தீரும். என் விஷயத்தில் உனது தீர்ப்பு மிக நீதமானது. உனக்கென நீ வைத்துக் கொண்ட அல்லது உனது நூலில் கூறியிருக்கும் அல்லது உனது படைப்பினங்களில் ஒருவருக்கு நீ கற்றுக் கொடுத்திருக்கும் அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான அறிவில் நீ மட்டும் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து பெயர்களைக் கொண்டும் உன்னிடம் நான் கேட்கிறேன். குர்ஆனை என் உள்ளத்திற்கு வசந்தமாக என் இதயத்திற்குப் பிரகாசமாக. என் கவலையை அகற்றக் கூடியதாக என் துக்கத்தை நீக்கக் கூடியதாக ஆக்கிவிடு!.
(முஸ்னது அஹ்மது)
16) உள்ளங்களைத் திருப்பக் கூடியவனே! உனக்கு வழிபடுவதின் மீது என் உள்ளத்தைத் திருப்பி வை!
(ஸஹீஹ் முஸ்லிம்)
17) உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! உனது மார்க்கத்தின் மீது என் உள்ளத்தை நிலைப்படுத்தி வை!.
(ஜாமிவுத் திர்மிதி)
18) அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் இவ்வுலகத்திலும் மறுமையிலும் பூரணச் சுகத்தைக் கேட்கிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
19) அல்லாஹ்வே! எல்லாக் காரியங்களிலும் எங்களது முடிவை அழகாக்கி வை! இவ்வுலகத்தின் இழிவை விட்டும், மறுவுலகத்தின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்துக் கொள்!.
(முஸ்னது அஹ்மது)
20) என் இறைவா... (என் எதிரிகள் விஷயத்தில்) எனக்குச் சாதகமாக உதவி செய்! எனக்கு எதிராக உதவி செய்து விடாதே! (நன்மைகளைச் செய்வதற்கு) எனக்கு உதவி செய்! எனக்கெதிராக உதவி செய்து விடாதே! எனக்குச் சாதகமாக சூழ்ச்சி செய்! எனக்கெதிராக சூழ்ச்சி செய்து விடாதே! எனக்கு நேர்வழி காட்டு! நேர்வழியை எனக்கு இலகுவாக்கிக் கொடு! என் மீது அநியாயம் செய்பவருக்கு எதிராக எனக்கு உதவி செய்! என் இறைவா... உனக்கு அதிகம் நன்றி செலுத்துபவனாக, உன்னை அதிகம் நினைப்பவனாக, உனக்கு அதிகம் பயந்தவனாக, உனக்கு அதிகம் கீழ்ப்படிந்தவனாக, அதிகம் அச்சமுடையவனாக, உன் பக்கமே நிம்மதி கொண்டவனாக, முற்றிலும் திரும்பியவனாக என்னை ஆக்கிவிடு! என் இறைவா... எனது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்! எனது பாவத்தைக் கழுவிவிடு! என் அழைப்புக்குப் பதில் கொடு! என் ஆதாரத்தை உறுதிப்படுத்து! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டு! எனது நாவை நேர்மைப்படுத்து! என் உள்ளத்திலுள்ள குரோதத்தை நீக்கிவிடு!.
(ஸுனன் அபூதாவூது)
21) அல்லாஹ்வே! உன்னுடைய நபி முஹம்மது உன்னிடம் கேட்ட நன்மையை நாங்களும் உன்னிடம் கேட்கிறோம். உன்னுடைய நபி முஹம்மது உன்னிடம் பாதுகாப்புத் தேடிய தீமைகளை விட்டு நாங்களும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் . உன்னிடமே உதவி தேடப்படுகிறது. உன்னிடமே எடுத்துச் சொல்லப்படுகிறது. பாவத்தை விட்டு மீளவோ நன்மை செய்ய சக்தி பெறவோ முடியாது. அல்லாஹ்வைக் கொண்டே தவிர!.
(ஜாமிவுத் திர்மிதி)
22) அல்லாஹ்வே! எனது செவியின் தீமையை விட்டும், எனது பார்வையின் தீமையை விட்டும், எனது நாவின் தீமையை விட்டும், எனது உள்ளத்தின் தீமையை விட்டும், எனது இந்திரியத்தின் தீமையை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
23) அல்லாஹ்வே! வெண்குஷ்டம், பைத்தியம், சொறி மற்றும் எல்லா கெட்ட நோய்களை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
24) அல்லாஹ்வே! கெட்ட குணங்கள் கெட்ட செயல்கள் கெட்ட ஆசைகள் அனைத்தையும் விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
25) அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிப்பவன்; சங்கையாளன்; மன்னிப்பதை விரும்புகிறாய்; ஆகவே என்னை மன்னித்துவிடு!.
(ஜாமிவுத் திர்மிதி)
26) அல்லாஹ்வே! நன்மைகளைச் செய்வதற்கு, தீமைகளை விடுவதற்கு ஏழைகளை விரும்புவதற்கு அருளை உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும், நீ எனக்குப் பிழை பொறுப்பைத் தா; எனக்குக் கருணை காட்டு என்றும் உன்னிடம் கேட்கிறேன். ஒரு கூட்டத்தினரை நீ சோதிக்க நாடினால் அந்த சோதனையிலிருந்து பாதுகாக்கப்பட்டவனாக என் உயிரைக் கைப்பற்றிக்கொள்! உன் அன்பை, உன்னை விரும்புவோரின் அன்பை, உனது அன்பிற்கு என்னை நெருக்கி வைக்கும் செயல்களின் ஆசையை உன்னிடம் நான் கேட்கிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
27) அல்லாஹ்வே! சீக்கிரமாக வரக்கூடியது, தாமதமாக வரக்கூடியது, நான் அறிந்து வைத்திருக்கும் நான் அறியாமல் இருக்கும் எல்லா நன்மைகளையும் உன்னிடம் கேட்கிறேன். சீக்கிரமாக வரக்கூடியது, தாமதமாக வரக்கூடியது நான் அறிந்து வைத்திருக்கும் நான் அறியாமல் இருக்கும் எல்லா தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! உனது அடிமையும் உனது தூதரும் உன்னிடம் கேட்ட எல்லா நன்மைகளையும் நிச்சயமாக நானும் உன்னிடம் கேட்கிறேன். உனது அடிமையும் உனது தூதரும் உன்னிடம் பாதுகாப்புத் தேடிய அனைத்து தீமையை விட்டு நானும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தையும் அதை எனக்கு நெருக்கமாக்கித் தரும் சொல், செயலையும் உன்னிடம் கேட்கிறேன். நரகத்தை விட்டும் அதில் கொண்டு போய் சேர்க்கும் சொல் செயலை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ எனக்கு விதித்த எல்லாத் தீர்ப்பையும் நன்மையாக ஆக்கித் தரும்படி உன்னிடம் கேட்கிறேன்.
(ஸூனன் இப்னுமாஜா)
28) அல்லாஹ்வே! நான் நிற்கும்போது இஸ்லாமைக் கொண்டே என்னைப் பாதுகாத்துக் கொள்! நான் உட்காரும்போதும் இஸ்லாமைக் கொண்டே என்னைப் பாதுகாத்துக் கொள்! நான் தூங்கும்போதும் இஸ்லாமைக் கொண்டே என்னைப் பாதுகாத்துக் கொள்! எதிரியோ பொறாமைக்காரனோ என்னைக் கொண்டு நகைப்புறும் படி செய்து விடாதே! அல்லாஹ்வே... உனது கையில் உள்ள நன்மையின் பொக்கிஷங்களிலிருந்து உன்னிடம் கேட்கிறேன். உனது கையில் உள்ள தீமையின் பொக்கிஷங்களை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
29) அல்லாஹ்வே! பாவங்களுக்கும் எங்களுக்குமிடையில் தடையாக இருக்கும் உனது அச்சத்தை எங்களுக்கு வழங்கு! உனது சொர்க்கத்தை நீ எங்களுக்கு தருமளவு உனது வழிபாட்டை எங்களுக்கு தா! உலகத்தின் சோதனைகளை நீ எங்களுக்கு இலகுவாக்கித் தரும் நம்பிக்கையைத் தா! அல்லாஹ்வே! எங்களது செவிகளில், எங்களது பார்வைகளில், எங்களது ஆற்றல்களில், எங்களை நீ உயிராக வைத்திருக்கும் காலம் வரைக்கும் எங்களுக்குச் சுகத்தைத் தா! எங்களுக்கு வாரிசைத் தா! எங்கள் கோபத்தை எங்களுக்கு அநீதி செய்தவர் மீது ஏற்படுத்திவிடு! எங்களைப் பகைத்துக் கொண்டவர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்! எங்கள் மார்க்க விஷயத்தில் எங்களைச் சோதித்து விடாதே! உலகத்தை எங்களுக்குப் பெரும் கவலையாகவும் எங்கள் அறிவின் முதிர்ச்சியாகவும் ஆக்கி விடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதவரை எங்கள் மீது சாட்டி விடாதே!.
(ஜாமிவுத் திர்மிதி)
30) அல்லாஹ்வே! கஞ்சத்தனத்தை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். கோழைத்தனத்தை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். பலவீனமான வயதை அடைவதை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உலகத்தின் குழப்பத்தை விட்டும் கப்ரின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸஹீஹுல் புகாரி)
31) அல்லாஹ்வே! எனது குற்றத்தை, என் அறியாமையை, எனது காரியத்தில் நான் வரம்பு மீறியதை என்னை விட அதிகமாக நீ அறிந்திருக்கும் என் குறைகளை எனக்கு மன்னித்தருள்! அல்லாஹ்வே! எனது விளையாட்டையும் எனது வினையத்தையும் எனது தவறையும் நான் நாடி செய்ததையும் எனக்கு மன்னித்தருள்! இவை அனைத்தும் என்னிடம் இருக்கத்தான் செய்கின்றன.
(ஸஹீஹுல் புகாரி)
32) அல்லாஹ்வே! நிச்சயமாக நான் என் ஆத்மாவிற்கு பெரும் அநியாயம் செய்து கொண்டேன். உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் இல்லை. உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பை வழங்கு. எனக்குக் கருணை காட்டு. நிச்சயமாக நீ தான் மகா மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன்.
(ஸஹீஹுல் புகாரி)
33) அல்லாஹ்வே! உனக்கே பணிந்தேன். உன்னைக் கொண்டே நம்பிக்கை கொண்டேன். உன்னிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். உன் பக்கமே திரும்பினேன். உன்னைக் கொண்டே வாதிடுகிறேன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அல்லாஹ்வே! உனது கண்ணியத்தைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன். என்னை நீ வழிதவறச் செய்து விடாதே! நீ என்றும் மரணிக்காது உயிரோடு இருப்பவன். ஜின்களும் மனிதர்களும் மரணித்து விடுவார்கள்.
(ஸஹீஹுல் புகாரி)
34) அல்லாஹ்வே! உனது கருணைக்குக் காரணமானவற்றை, உனது மன்னிப்பைத் தரும் அமல்களை அனைத்துப் பாவத்திலிருந்தும் விடுதலையை எல்லா நன்மைகளின் பாக்கியத்தை சொர்க்கத்தின் வெற்றியை நரகத்தின் விடுதலையை நிச்சயமாக நாங்கள் உன்னிடம் கேட்கிறோம்.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
35) அல்லாஹ்வே! எனது வயோதிகத்திலும் எனது ஆயுளின் இறுதியிலும் எனக்கு விசாலமான வாழ்க்கை வசதியைத் தா!.
(முஃஜமுத் தப்ரானி)
35) அல்லாஹ்வே! என் பாவங்களை எனக்கு மன்னித்தருள்! எனக்கு என் வீட்டில் வசதியை ஏற்படுத்து! எனது வாழ்க்கைத் தரத்தில் பரக்கத் செய்!.
(முஸ்னது அஹ்மது)
36) அல்லாஹ்வே! உனது கிருபையையும் உனது கருணையையும் உன்னிடம் கேட்கிறேன். உன்னைத் தவிர அதற்கு உரிமையாளன் வேறு யாரும் இல்லை.
(முஃஜமுத் தப்ரானி)
37) அல்லாஹ்வே! கீழே விழுந்து இடிபாடுகளில் சிக்கி நீரில் மூழ்கி நெருப்பில் எரிந்து சாவதை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவதை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். உனது பாதையில் பின்வாங்கியவனாக நான் மரணிப்பதை விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டு சாவதை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
(ஸீனன் அபூதாவூது)
38) அல்லாஹ்வே! பசியை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மோசடித்தனத்தை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். அது மிகக் கெட்ட பழக்கமாகும்.
(ஸீனன் அபூதாவூது)
39) அல்லாஹ்வே! பலவீனம், சோம்பேறித்தனம், கோழைத்தனம், கஞ்சத்தனம், வயோதிகம், உள்ளம் இறுகுதல், அலட்சியம், வறுமை, இழிவு, தேவையாகுதல் ஆகிய அனைத்தையும் விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். ஏழ்மை, நிராகரித்தல், பாவம், முரண்படுதல், நயவஞ்சகத்தனம், புகழை விரும்புதல், முகஸ்துதி ஆகிய அனைத்தையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். செவிட்டுத்தனம், ஊமையாகுதல், பைத்தியமாகுதல், குஷ்டம், வெண்குஷ்டம், கெட்ட நோய்கள் ஆகிய அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸூனனுன் நஸாயி)
40) அல்லாஹ்வே! ஏழ்மை, குறைதல் மற்றும் இழிவடைதலை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நான் அநீதி இழைப்பதை விட்டும் எனக்கு அநீதி இழைக்கப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸூனனுன் நஸாயி)
41) அல்லாஹ்வே! நான் நிரந்தரமாக தங்கி இருக்கும் உள்ளூரில் தீய அண்டை வீட்டார் அமைவதை விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். பாலைவனம் போன்றவற்றில் உள்ள அண்டைவீட்டார் மாறிக்கொண்டே இருப்பார்.
(ஸூனனுன் நஸாயி)
42) அல்லாஹ்வே! பயமற்ற உள்ளத்தை விட்டும், ஏற்கப்படாத பிரார்த்தனையை விட்டும், திருப்தி கொள்ளாத ஆன்மாவை விட்டும் பயனற்றக் கல்வியை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இந்த நான்கை விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
43) அல்லாஹ்வே! தீய நாளை விட்டும், தீய இரவை விட்டும், தீய நேரத்தை விட்டும், தீய நண்பரை விட்டும், தங்கும் ஊரில் தீய அண்டை வீட்டார் அமைவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(முஃஜமுத் தப்ரானி)
44) அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன். நரகத்தை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்.
(ஜாமிவுத் திர்மிதி)
45) அல்லாஹ்வே! மார்க்கத்தில் எனக்கு ஞானத்தைக் கொடு!.
(ஸஹீஹூல் புகாரி)
46) அல்லாஹ்வே! நான் அறிந்த நிலையில் உனக்கு இணை வைப்பதை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நான் அறியாதவற்றிற்கு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
(முஸ்னது அஹ்மது)
47) அல்லாஹ்வே! எனக்கு நீ கற்றுக் கொடுத்தக் கல்வியைக் கொண்டு எனக்குப் பலன் தா! எனக்குப் பலன் தருவதை எனக்குக் கற்றுக் கொடு! கல்வியை எனக்கு அதிகரித்துக் கொடு.
(ஸீனன் இப்னுமாஜா)
48) அல்லாஹ்வே! பலன் தரும் கல்வியை, தூய்மையான உணவை, ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
(ஸீனன் இப்னுமாஜா)
49) அல்லாஹ்வே! நிச்சயமாக நீ தனித்தவன்; ஒருவன்; தேவையற்றவன்; யாரையும் பெற்றெடுக்காதவன்; யாருக்கும் பிறக்காதவன்; தன்னிகரற்றவன் என்று உன்னைப் போற்றி உன்னிடம் கேட்கிறேன். எனது குற்றங்களையெல்லாம் எனக்கு மன்னித்தருள்! நிச்சயமாக நீயே மகா மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன்.
(ஸுனனுன் நஸாயி)
50) அல்லாஹ்வே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து உன்னிடம் கேட்கிறேன். உனக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. (நீ தனித்தவன்; உனக்கு இணை, துணை இல்லை; நீ) மாபெரும் உபகாரி; வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனே! சங்கைமிக்கவனே! கண்ணியமிக்கவனே! என்றும் உயிரோடு இருப்பவனே! நிர்வகிப்பவனே! நிச்சயமாக நான் உன்னிடம் (சொர்க்கத்தைக்) கேட்கிறேன். (நரகத்தை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.)
(ஸுனன் அபூதாவூது)
51) அல்லாஹ்வே! நிச்சயமாக நீதான் அல்லாஹ்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தனித்தவன்; தேவையற்றவன்; யாரையும் பெற்றெடுக்காதவன்; யாருக்கும் பிறக்காதவன்; தன்னிகரற்றவன் என்று நான் சாட்சி கூறி உன்னிடம் கேட்கிறேன்.
(ஸுனன் அபூதாவூது)
52) என் இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்கு! என் பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்! நிச்சயமாக நீதான் பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்பவன்; மகா மன்னிப்பாளன்.
(ஸுனன் அபூதாவூது)
53) அல்லாஹ்வே! நீ மறைவான அனைத்தையும் அறிந்திருக்கிறாய், படைப்பினங்கள் அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றிருக்கிறாய். ஆகவே, வாழ்க்கை எனக்கு சிறப்பாக அமையும் என்று நீ அறிந்திருக்கும் வரை என்னை உயிர் வாழச்செய்! மரணம் எனக்கு நன்மை என்று நீ அறிந்தால் எனக்கு மரணத்தைத் தா! அல்லாஹ்வே! தனிமையிலும் வெளிப்படையிலும் உனது அச்சத்தை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். மகிழ்ச்சியிலும் கோபத்திலும் உண்மையை உரைப்பதை உன்னிடம் கேட்கிறேன். செல்வத்திலும் வறுமையிலும் நடுநிலையுடன் நடந்து கொள்வதை உன்னிடம் கேட்கிறேன். முடிந்துவிடாத அருட்கொடையை உன்னிடம் கேட்கிறேன். நீங்கி விடாத கண் குளிர்ச்சியை உன்னிடம் கேட்கிறேன். உனது விதிக்குப் பின் பொருத்தத்தை உன்னிடம் கேட்கிறேன். மரணத்திற்குப் பின் மகிழ்ச்சியான வாழ்க்கையை உன்னிடம் கேட்கிறேன். உனது முகத்தைப் பார்க்கும் இன்பத்தை உன்னிடம் கேட்கிறேன். உன்னைச் சந்திக்கும் ஆசையை உன்னிடம் கேட்கிறேன். இவை அனைத்தையும் இடையூறு தரும் சிரமமின்றி, வழிகெடுக்கும் குழப்பமின்றி எனக்கு வழங்கியருள்! அல்லாஹ்வே! ஈமானின் அலங்காரத்தால் எங்களை அலங்கரித்து விடு! நேர்வழி காட்டுபவர்களாகவும் நேர்வழி பெற்றவர்களாகவும் எங்களை ஆக்கியருள்!
(ஸுனனுன் நஸாயி)
54) அல்லாஹ்வே! உன்னுடைய அன்பையும் யாருடைய அன்பு உன்னிடம் எனக்குப் பலன் தருமோ அவருடைய அன்பையும் நீ எனக்கு வழங்கு! அல்லாஹ்வே! நான் விரும்பியவற்றிலிருந்து நீ எனக்கு வழங்கியதை நீ விரும்புவதைச் செய்வதற்கு எனக்கு ஆற்றலாக ஆக்கி வை! அல்லாஹ்வே! நான் விரும்பியவற்றிலிருந்து எனக்கு நீ கொடுக்காததை நீ விரும்பியவற்றை நான் செய்வதற்கு வாய்ப்பாக ஆக்கி வை!.
(ஜாமிவுத் திர்மிதி)
55) அல்லாஹ்வே! பாவங்களை விட்டும், குற்றங்களை விட்டும் என்னை நீ தூய்மைப்படுத்து! அல்லாஹ்வே! வெண்மையான ஆடை அழுக்கை விட்டு தூய்மையாக்கப்படுவதுபோல் அவற்றை விட்டு என்னை நீ தூய்மைப்படுத்து! அல்லாஹ்வே! பனிக்கட்டியைக் கொண்டும் ஆலங்கட்டியைக் கொண்டும் குளிர்ந்த நீரைக் கொண்டும் என்னை நீ தூய்மைப்படுத்து!.
(ஸுனனுன் நஸாயி)
56) அல்லாஹ்வே! கஞ்சத்தனம், தீய வாழ்க்கை, இதயத்தின் குழப்பம், கப்ரின் வேதனை ஆகிய அனைத்தையும் விட்டு நிச்சயமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸுனனுன் நஸாயி)
57) அல்லாஹ்வே! ஜிப்ராயீல் மற்றும் மீக்காயீலுடைய இறைவனே! இஸ்ராஃபீலுடைய இறைவனே! நரகத்தின் உஷ்ணத்தை விட்டும், கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸுனனுன் நஸாயி)
58) அல்லாஹ்வே! எனக்கு நல்வழியை (என் உள்ளத்தில்) உதிக்க வை! என் ஆத்மாவின் தீங்கை விட்டு என்னைப் பாதுகாத்துக் கொள்!.
(ஜாமிவுத் திர்மிதி)
59) அல்லாஹ்வே! நிச்சயமாக நான் பலன் தரும் கல்வியை உன்னிடம் கேட்கிறேன். பலன் தராத கல்வியை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
(ஸீனன் இப்னுமாஜா)
60) அல்லாஹ்வே! (ஏழு) வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! அனைத்துப் பொருட்களின் இறைவனே! விதைகளையும் வித்துகளையும் உடைப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கானை இறக்கியவனே! உச்சி முடியை நீ பிடித்திருக்கும் அனைத்துப் பொருட்களின் தீங்கை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வே! நீயே முந்தியவன்; உனக்கு முன் எதுவும் இல்லை. நீயே பிந்தியவன்; உனக்குப் பிறகு எதுவுமில்லை. நீயே வெளிப்படையானவன்; உனக்கு மேல் எதுவும் இல்லை. நீ மறைவானவன்; உனக்கு மறைந்தது எதுவும் இல்லை. எங்களை விட்டும் கடனை அடைத்து விடு; ஏழ்மையை விட்டும் எங்களை (தூரமாக்கி) செல்வத்தை வழங்கு!.
(ஸஹீஹ் முஸ்லிம்)
61) அல்லாஹ்வே! எங்கள் உள்ளங்களுக் கிடையில் அன்பை ஏற்படுத்து. எங்களுக்குக் கிடையில் சீர்திருத்தம் செய். ஈடேற்றத்தின் பாதைகளுக்கு எங்களுக்கு வழிகாட்டு! இருள்களை விட்டும் வெளிச்சத்தின் பக்கம் எங்களைப் பாதுகாத்துச் சேர்த்து வை! வெளிப்படையான மறைவான எல்லா மானக்கேடான விஷயங்களை விட்டும் எங்களைத் தூரமாக்கு! எங்களது செவிகளில், எங்கள் பார்வைகளில். எங்கள் உள்ளங்களில். எங்கள் மனைவியர்களில். எங்களது சந்ததிகளில் எங்களுக்கு மிக பரக்கத் செய்! எங்களது பிழை பொறுப்பை ஏற்றுக் கொள். நிச்சயமாக நீயே பிழை பொறுப்பை ஏற்றுக் கொள்பவன்! நிகரற்ற அன்புடையவன். உனது அருட்கொடைக்கு நன்றி செலுத்துபவர்களாக, அவற்றைக் கொண்டு உன்னைப் புகழ்ந்தவர்களாக, அவற்றை ஏற்றுக் கொண்டவர்களாக எங்களை ஆக்கி வை! அவற்றை எங்களுக்கு முழுமையாக்கி வை!
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
62) அல்லாஹ்வே! சிறந்த யாசகத்தை, சிறந்த பிரார்த்தனையை, சிறந்த வெற்றியை, சிறந்த அமலை, சிறந்த நன்மையை, சிறந்த வாழ்க்கையை, சிறந்த மரணத்தை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். என்னை உறுதிப்படுத்து! எனது தராசுகளைக் கனக்க வை! எனது ஈமானை உண்மையாக்கி வை! எனது அந்தஸ்துகளை உயர்த்து! என் தொழுகையை ஏற்றுக் கொள்! என் குற்றத்தை மன்னித்துவிடு! சொர்க்கத்தில் மிக உயர்ந்த அந்தஸ்துகளை உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நன்மையின் தொடக்கங்களையும் அதன் முடிவுகளையும் அதன் அனைத்து வகைகளையும் அதில் முந்தியதையும் அதில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் சொர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துகளையும் உன்னிடம் கேட்கிறேன். ஆமீன்! அல்லாஹ்வே! நான் எதைச் செய்ய செல்கிறேனோ அதன் நன்மையையும் எதைச் செய்கிறேனோ அதன் நன்மையையும் மறைந்திருப்பவற்றின் நன்மையையும் வெளிப்படையாக தெரிபவற்றின் நன்மையையும் சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளையும் உன்னிடம் கேட்கிறேன். ஆமீன்! அல்லாஹ்வே! எனது (சிறப்பை) நற்பெயரை உயர்வடையச் செய்! எனது பாவத்தை அகற்றிவிடு! எனது காரியத்தைச் சீர்திருத்திவிடு! எனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்து! எனது கற்பைப் பாதுகாத்துக் கொள்! என் உள்ளத்தை ஒளிமயமாக்கு! என் குற்றத்தை எனக்கு மன்னித்துவிடு! சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை உன்னிடம் கேட்கிறேன்! ஆமீன்! அல்லாஹ்வே! எனது ஆத்மாவில், எனது செவியில், எனது பார்வையில், எனது உயிரில், எனது படைப்பில், எனது குணத்தில், எனது குடும்பத்தில், எனது வாழ்க்கையில், எனது மரணத்தில், எனது செயலில் நீ பரக்கத் செய்ய வேண்டுமென உன்னிடம் கேட்கிறேன். எனது நன்மைகளை அங்கீகரித்துக் கொள்! சொர்க்கத்தில் உயர்ந்த பதவிகளை உன்னிடம் கேட்கிறேன். ஆமீன்!
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
63) அல்லாஹ்வே! கெட்ட குணங்கள், கெட்ட ஆசைகள், கடும் நோய்கள் ஆகிய அனைத்தையும் விட்டு என்னைத் தூரமாக்கி வை!.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
64) அல்லாஹ்வே! நீ எனக்குக் கொடுத்ததைக் கொண்டு என்னைத் திருப்தியுறச் செய்! அதில் எனக்கு நீ பரக்கத் செய்! என்னுடைய உடைமைகளில் எது என்னிடமிருந்து தவறிவிட்டதோ அதற்கானப் பகரமாக எனக்குச் சிறந்ததை வழங்கு!.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
65) அல்லாஹ்வே! என்னிடம் மிக இலகுவாக கேள்வி கேட்பாயாக!.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
66) அல்லாஹ்வே! உன்னை நினைவு கூர்வதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் எங்களுக்கு நீ உதவி செய்!.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
67) அல்லாஹ்வே! தடுமாறாத நம்பிக்கையும் தீர்ந்துவிடாத அருட்கொடையையும் குல்த் என்ற உயர்ந்த சொர்க்கத்தில் முஹம்மது நபி அவர்களுடன் தோழமை கொள்வதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
(ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
68) அல்லாஹ்வே! எனது நஃப்ஸின் தீங்கை விட்டும் என்னைப் பாதுகாத்துக் கொள். எனது காரியத்தில் மிகச் சரியானதை எனக்கு உறுதிப்படுத்தித் தா! அல்லாஹ்வே! நான் ரகசியமாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறிந்து செய்ததையும், அறியாமல் செய்ததையும் எனக்கு மன்னித்தருள்.
(ஸுனனுன் நஸாயி)
69) அல்லாஹ்வே! கடன் மிகைப்பதை விட்டும். எதிரிகள் மிகைப்பதை விட்டும். எதிரிகள் நகைப்பதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
(ஸுனனுன் நஸாயி)
70) அல்லாஹ்வே! எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு உணவளி! எனக்கு பூரணச் சுகத்தைத் தா! மறுமை நாளில் நெருக்கடியான நிலைமையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்
(ஸுனனுன் நஸாயி)
71) அல்லாஹ்வே! எனது செவியில், எனது பார்வையில், எனக்கு சுகத்தைத் தா! அவ்விரண்டுக்கும் எனக்கு வாரிசை ஏற்படுத்து! எனக்கு அநீதி இழைப்பவருக்கு எதிராக எனக்கு உதவி செய்! எனக்காக நீ அவரிடம் பழிவாங்கு!.
(ஜாமிவுத் திர்மிதி)
72) அல்லாஹ்வே! தூய்மையான வாழ்க்கையையும் நேரான மரணத்தையும் கேவலமற்ற, பழிப்பற்ற மீண்டு செல்லும் இடத்தையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன்.
(முஸ்தத்ரகுல் ஹாகிம்)
73) அல்லாஹ்வே! உனக்கே எல்லாப் புகழும் உரியது. அல்லாஹ்வே! நீ விரித்ததை யாராலும் மடக்க முடியாது. நீ மடக்கியதை யாராலும் விரிக்க முடியாது. நீ வழிக்கெடுத்தவரை நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. நீ நேர்வழி காட்டியவரை வழிக்கெடுப்பவர் யாருமில்லை. நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை. நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தூரமாக்கியதைச் சமீபமாக்குபவர் யாருமில்லை. நீ சமீபமாக்கியதைத் தூரமாக்குபவர் யாருமில்லை. அல்லாஹ்வே! உன்னுடைய பரக்கத்துகள் , உன்னுடைய கருணை, உன்னுடைய கிருபை, உன்னுடைய வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் எங்களுக்கு வாரி வழங்கு! அல்லாஹ்வே! நீங்காத, அழியாத, நிரந்தரமான அருட்கொடையை நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! மறுமை நாளில் அருட்கொடைகளையும், அச்ச நாளில் பாதுகாப்பையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வே! நீ எங்களுக்குக் கொடுத்ததின் தீங்கை விட்டும், எங்களுக்குக் கொடுக்காததின் தீமையை விட்டும், நிச்சயமாக உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ்வே! எங்களுக்கு ஈமானை நேசமாக்கி வை! அதை எங்களுடைய உள்ளங்களிலே அலங்கரித்து வை! நிராகரிப்பையும் உனது கட்டளைகளை மீறுவதையும் பாவங்கள் செய்வதையும் எங்களுக்கு வெறுப்பாக்கி வை! எங்களை நேர்வழி பெற்றவர்களில் ஆக்கி வை! அல்லாஹ்வே! எங்களை முஸ்லிம்களாக மரணிக்க வை! முஸ்லிம்களாக மீண்டும் எழுப்பு! இழிவின்றி, குழப்பமின்றி எங்களைப் பாதுகாத்து நல்லோர்களுடன் எங்களைச் சேர்த்து வை! அல்லாஹ்வே! உனது தூதரைப் பொய்ப்பிக்கும், உன் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கும் காஃபிர்களைக் கொன்றுவிடு! உனது தண்டனையையும் வேதனையையும் அவர்கள் மீது இறக்கிவிடு! அல்லாஹ்வே! கிதாப் கொடுக்கப்பட்ட காஃபிர்களைக் கொன்றுவிடு! உண்மையான இறைவனே.. ஆமீன்!.
(அல் அதபுல் முஃப்ரத்)
74) அல்லாஹ்வே எனக்கு மன்னிப்பு வழங்கு! எனக்குக் கருணை காட்டு! எனக்கு நேர்வழி காட்டு! எனக்கு நற்சுகத்தைத் தா! எனக்கு உணவளி! எனக்கு ஆறுதல் வழங்கு! எனக்கு உயர்வைக் கொடு!
(ஜாமிவுத் திர்மிதி)
75) அல்லாஹ்வே! எங்களுக்கு (உன் அருட்கொடைகளை) அதிகப்படுத்து! எங்களுக்குக் குறைத்து விடாதே! எங்களை கண்ணியப்படுத்து! எங்களை இழிவுபடுத்தி விடாதே! (உன் அருட்கொடைகளை) எங்களுக்கு கொடு! எங்களை இழக்க வைத்துவிடாதே! எங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்! எங்களை விட்டுவிடாதே! எங்களைத் திருப்திகொள்ள செய்! நீயும் எங்களைக் கொண்டு திருப்திகொள்.
(ஜாமிவுத் திர்மிதி)
76) அல்லாஹ்வே! எனது உருவத்தை அழகுபடுத்தினாய்; எனது குணத்தையும் அழகுபடுத்து!.
(முஸ்னது அஹ்மது)
77) அல்லாஹ்வே! என்னை உறுதிப் படுத்து; நேர்வழி காட்டுபவனாகவும், நேர்வழி பெற்றவனாகவும் என்னை ஆக்கி வை!.
(ஸஹீஹுல் புகாரி)
www.tamilislamicjb.com
No comments