H39) உரையை கேட்க வேண்டும்
உரையை கேட்க வேண்டும்
பத்தாம் நாள் ஹாஜிகளுக்குப் பெருநாள் தொழுகை கிடையாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் சொற்பொழிவு நிகழ்த்தியதாக பல ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே, அங்கு நிகழ்த்தப்படும் உரையை கேட்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பா எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: ஹிர்மாஸ் பின் ஸியாத் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 19218, அபூதாவூத் 1669
பத்தாம் நாளன்று மினாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உரையை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் 1670
அனேகமாக மினாவில் அவர்கள் லுஹர் தொழுகை நடத்திய பிறகு இந்த உரையை நிகழ்த்தியிருக்கக் கூடும்.
சுன்னத்தை விடக் கூடாது.
மினாவில் கல்லெறிவதற்கு தாமதமானால் தவாஃப் அல் இஃபாளாவைச் செய்து விட்டு, பிறகு கல்லெறியலாம். தவறில்லை. அல்லது கல்லெறிந்த பிறகு தவாஃப் அல் இஃபாளாவைச் செய்யலாம். அதிலும் தவறில்லை. இதன் நேரங்களை முன்பின் மாற்ற முடியும்.
ஆனால் உரை என்பது குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்த்தப்படுவது. அதை மாற்றி அமைக்க முடியாது. எனவே, இந்த உரையை கேட்பதற்காக, நமது நேரத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். உரை நிகழ்த்துவதும், அதனை கேட்பதும் நபிவழி. எனவே, இந்த சுன்னத்தை விட்டுவிடக் கூடாது.
வரிசை மாறினால், குற்றமில்லை
பத்தாம் நாள் கிரியைகளை மேலே நாம் கூறிய வரிசைப்படி செய்வது நபிவழி என்றாலும் அந்த வரிசைக்கு மாற்றம் செய்வதில் தவறேதும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜம்ரதுல் அகபாவில் நிற்கும் போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன்பே (தலையை) மழித்து விட்டேன் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை என்றார்கள். இன்னொருவர் வந்து நான் கல்லெறிவதற்கு முன்பே கஃபாவைத் தவாஃப் செய்து விட்டேன் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது கல்லெறிவீராக! அதில் தவறேதும் இல்லை என்றார்கள். முன் பின்னாக செய்யப்பட்ட எதைக் குறித்து கேட்கப்பட்ட போதும் ”செய்து கொள்! தவறேதும் இல்லை” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)
நூல்: புகாரி 124, 1738, 83, 1736, 6665
மினாவில் பத்தாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களை முன் பின்னாகச் செய்வதில் தவறேதும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
எனவே, கல்லெறிதல், முடி மளிதத்தல், தவாஃப்-ஸஃயீ என வரிசையாக செய்ய முடியாவிட்டால் மாற்றி செய்வது குற்றமில்லை. வரிசையாகத் தான் செய்ய வேண்டும் என்பதற்காக முண்டியடித்துச் செல்லக் கூடாது.
No comments