எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H3) இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

3. இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்



ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளார்கள். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும். அதாவது தல்பியா கூறி, நிய்யத் கூற வேண்டும். இஹ்ராமின் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க ஆரம்பிக்க வேண்டும்.


அந்த இடங்களாவன.


துல்ஹுலைஃபா: மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


ஜுஹ்ஃபா: மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


கர்ன் அல்மனாஸில்: மக்காவுக்கு கிழக்கில் 94 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு மலையின் பெயராகும்.


யலம்லம்: மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம் வழியாகச் செல்வதால், அவர்கள் இங்கே இஹ்ராம் கட்ட வேண்டும்.

 


விமானத்தில் செல்பவர்கள்:


விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி, நிய்யத் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.


விமானத்தில் செல்பவர்கள் அந்த இடங்களை அடையும் போது, விமானத்திலேயே அறிவிப்பு செய்யப்படும், அப்போது தான் தல்பியா கூறி, நிய்யத் கூற வேண்டும். இதற்குத் தான் இஹ்ராம் கட்டுதல் என்று பெயர். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் கட்டுதல் கிடையாது.


முன்னரே ஆடை அணியலாம்


அதே நேரம், நிய்யத்தை கூறும் போது, இஹ்ராமிற்குரிய குறிப்பிட்ட ஆடையை அணிந்திருக்க வேண்டும். தைக்கப்படாத அந்த ஆடையை, விமானத்தில் உள்ள அறையில் மாற்றிக் கொள்ளலாம். அல்லது விமானம் ஏறுவதற்கு முன்னரே இஹ்ராம் ஆடையை அணிந்து கொண்டாலும் தவறில்லை.


இன்னும் சொல்வதாக இருந்தால் இது தான் எளிதானது. ஏர்போர்ட்டிலேயே குளித்து, ஆடையை அணிந்து கொண்டு, விமானத்தில் ஏறி, மீகாத் (எல்லைகள்) என்று சொல்லப்படும் அந்த இடம் வந்ததும். தல்பியா கூறி, நிய்யத் கூறி, இஹ்ராம் கட்டவேண்டும்.


”மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா என்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்” எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.


No comments

Powered by Blogger.