எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

H22) அரஃபாவுக்கு செல்லுதல்

அரஃபாவுக்கு செல்லுதல்


மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட வேண்டும்.


”நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.”


(நூல்: முஸ்லிம் 2137)


செல்லும் வழியில் தல்பியா, தக்பீர் கூற வேண்டும்


மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக் கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.


”நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன்.


அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் ”தல்பியா கூற விரும்பியவர், தல்பியா கூறுவார். அது ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும் ஆட்சேபிக்கப்படவில்லை” என்று விடையளித்தார்கள்”


அறிவிப்பாளர்: முஹம்மத் பின் அபீபக்ர்


நூல்: புகாரி 970, 1659


அரஃபாவில் தங்குவதன் அவசியம்


ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில் தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ் கூடாது.


”ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம் இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து கொள்வார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)


நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814


ஒன்பதாம் நாள் நண்பகலுக்குள் அரஃபாவுக்கு வந்து விடுவது நபிவழி என்றாலும்,


பத்தாம் நாள் பஜ்ருக்கு முன்பாக வந்து விட்டாலும் ஹஜ் கூடி விடும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம். 


அரஃபாவில் எந்த இடத்திலும் தங்கலாம்


அரஃபா மைதானத்தில் குறிப்பிட்ட இடத்தில் தான் தங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரஃபா மைதானத்தின் எந்த இடத்திலும் தங்கலாம்.


”அரஃபா மைதானம் முழுவதும் தங்குவதற்கு ஏற்ற இடமாகும்” என்பது நபி மொழி.


அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


(நூல்: முஸ்லிம் 2138)


எனினும், நீங்கள் தங்கும் இடம் அரஃபா பெருவௌிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் அரஃபாவில் தங்காவிட்டால் ஹஜ் கூடாது. ஏனெனில்,


”ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான்...” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி)


நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814


No comments

Powered by Blogger.