எந்நேரமும் உங்கள் கரத்தில் இருக்கவேண்டிய இந்த இணையதளத்தை ஒரு செயலியாக நாங்கள் வடிவமைத்து உங்களுக்குத் தருவதற்கு அல்லாஹ் அருள் புரிந்தான். பயன்பெறுங்கள், பிறருக்கு அறிமுகப்படுத்துங்கள்!

44 - Ad-Dukhaan

 44 - ஸூரத்துல் ஃபத்ஹ் (வெற்றி) (Ad-Dukhaan - الدخان)


44:1 - ஹா, மீம்.


44:2 - தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!.


44:3 - நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.


44:4 - அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.


44:5 - அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.


44:6 - (அது) உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள ரஹ்மத்தாகும்; நிச்சயமாக, அவன் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.


44:7 - நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).


44:8 - அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.


44:9 - ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.


44:10 - ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.


44:11 - (அப்புகை) மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; "இது நோவினை செய்யும் வேதனையாகும்".


44:12 - "எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம்" (எனக் கூறுவர்).


44:13 - நினைவுறுத்தும் நல்லுபதேசம் அவர்களுக்கு எவ்வாறு (அந்நேரம்) பயனளிக்கும்? (முன்னமேயே சத்தியத்தை) விளக்குபவரான தூதர் அவர்களிடம் வந்திருக்கின்றார்.


44:14 - அவர்கள் அவதை விட்டுப் பின் வாங்கிக் கொண்டு (மற்றவர்களால் இவர்) "கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்" எனக் கூறினர்.


44:15 - நிச்சயமாக நாம் வேதனையைச் சிறிது (காலத்திற்காக) விலக்குவோம்; (ஆனால், பின்னரும்) நீங்கள் நிச்சயமாகத் (தீமையின் பக்கம்) திரும்புபவர்களே.


44:16 - ஒருநாள் நாம் (உங்களைப்) பெரும் பிடியாகப் பிடிப்போம்; நிச்சயமாக (அந்நாளில்) நாம் பழி தீர்ப்போம்.


44:17 - அன்றியும், நாம் இவர்களுக்கு முன்னரே ஃபிர்அவ்னுடைய சமூகத்தவரை நிச்சயமாகச் சோதித்தோம்; கண்ணியமான தூதரும் அவர்களிடம் வந்தார்.


44:18 - அவர் (கூறினார்;) "என்னிடம் நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களை ஒப்படைத்து விடுங்கள்; நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதனாவேன்.


44:19 - அன்றியும், "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதிராக உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான சான்றுகளுடன் வந்திருக்கின்றேன்.


44:20 - அன்றியும், "என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.


44:21 - "மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளங்கள்" (என்று மூஸா கூறினார்).


44:22 - (அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). "நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.


44:23 - "என் அடியார்களை (அழைத்து)க் கொண்டு, இரவில் நீர் (வேறிடம்) செல்க நிச்சயமாக நீங்கள பின் தொடரப்படுவீர்கள்" (என்று இறைவன் கூறினான்).


44:24 - அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி" இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).


44:25 - எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?.


44:26 - இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).


44:27 - இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).


44:28 - அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.


44:29 - ஆகவே, அவர்களுக்காக வானமும் பூமியும் அழவுமில்லை (தப்பித்துக் கொள்ள) அவகாசமும் கொடுக்கப்பட்டவர்களாகவும் அவர்களில்லை.


44:30 - நாம் இஸ்ராயீலின் சந்ததியை இழிவு தரும் வேதனையிலிருந்தும் திட்டமாகக் காப்பாற்றினோம்;.


44:31 - ஃபிர்அவ்னை விட்டும் (காப்பாற்றினோம்) நிச்சயமாக அவன் ஆணவம் கொண்டவனாக, வரம்பு மீறியவனாக இருந்தான்.


44:32 - நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.


44:33 - அன்றியும், நாம் அவர்களுக்கு அத்தாட்சிகளை கொடுத்தோம்; அவற்றில் துலக்கமான சோதனை இருந்தது.


44:34 - நிச்சயமாக அவர்கள் (மக்கா காஃபிர்கள்) கூறுகிறார்கள்;.


44:35 - "எங்களுக்கு முதலில் ஏற்படும் மரணத்தைத் தவிர வேறு எதுவுமில்லை நாங்கள் மீண்டும் எழுப்படுபவர்கள் அல்லர்."


44:36 - "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், எங்கள் மூதாதையரை (திரும்பக்) கொண்டு வாருங்கள்."


44:37 - இவர்களும் மேலா? அல்லது 'துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.


44:38 - மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.


44:39 - இவ்விரண்டையும், சத்தியத்தைக் கொண்டேயன்றி நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.


44:40 - நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள்தாம் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்.


44:41 - ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.


44:42 - (எவர்கள் மீது) அல்லாஹ் கிருபை செய்கிறானோ, அவர்களைத் தவிர - நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.


44:43 - நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம் (அதுவே).


44:44 - பாவிகளுக்குரிய உணவு.


44:45 - அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது கொதிக்கும்.


44:46 - வெந்நீர் கொதிப்பதைப் போல்.


44:47 - "அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.


44:48 - "பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.


44:49 - "நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!.


44:50 - "நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்" (என்று அவர்களிடம் சொல்லப்படும்).


44:51 - பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற, இடத்தில் இருப்பார்கள்.


44:52 - சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்).


44:53 - ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீதாம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள்.


44:54 - இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.


44:55 - அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள்.


44:56 - முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான்.


44:57 - (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியமாகும்.


44:58 - அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.


44:59 - ஆகவே, நீரும் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

       Back                    Home                    Next

No comments

Powered by Blogger.